பல்கேரியாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அஜித்தின் எளிமையைப் பார்த்து பைக் ஸ்டண்ட் கலைஞர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலருடன் முக்கியமான காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பில் இருந்துதான் ஜெயலலிதா மறைவுக்கு வந்து சென்றார் அஜித்.

பல்கேரியா சாலைகளில் சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. இக்காட்சிகளுக்கு நானே பைக் ஓட்டுகிறேன் என்று கூற, மறுப்பு தெரிவித்திருக்கிறது படக்குழு. அஜித்துக்கு பதிலாக பைக் ஸ்டண்ட் கலைஞர் ஒருவரை வைத்து, சண்டைக்காட்சியின் சில பகுதிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

ஜோரியன் பைக் ஓட்டும்போது அஜித் எடுத்த புகைப்படம் (படம்: ஜோரியன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து)

அதில் நடித்த பைக் ஸ்டண்ட் கலைஞர் ஜோரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அஜித்குமார் (இந்தியாவில் மிகப் பெரிய நட்சத்திரம்) அவருக்கு டூப்பாக நடித்து பெருமை. அவரும் பைக்கை வைத்து பல ஆக்‌ஷன் செய்கிறார். திறமையான பைலட். அவரது எளிமையைக் கண்டு வியந்தேன். இந்த புகைப்படத்தை எடுத்தது அஜித்தான். அதை காலை 3 மணிக்கு பதிவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பல்கேரியா படப்பிடிப்பைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்திலும் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.