அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விவேகம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், வசூல் ரீதியாக அப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் வார இறுதி நாட்களில் இப்படம் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விவேகம் படத்திற்காக அஜித் ரொம்பவும் ரிஸ்க்கான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்படவே, படப்பிடிப்பு முடிந்தபிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என முடிவு செய்திருந்தார். அதன்படி, படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில்,  அஜித் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வந்தார்.

அதன்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. இதன்படி, நேற்று அஜித்துக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அஜித் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும் அஜித்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும்  விரைவில் வீடு திரும்பி விடுவார் என்றும் அஜித்தின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து ரசிகர்களுக்கு செய்தியாக சென்றுள்ளது. இதனால், அஜித் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.