ஆஸ்கார் விருதுக்கு ஏர்.ஆர். ரகுமானின் பெயர் மீண்டும் பரிந்துரை

‘பீலே’ ஆங்கில படத்துக்கு இசையமைத்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு ஏர்.ஆர்.ரகுமான் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கால்பந்தாட்ட வீரர்
பிரேசிலைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ‘பீலே’யின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து, ‘பீலே’ என்ற பெயரில் ஆங்கிலப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை ஜேக்ப் ஜிம்பாலிஸ்ட், மைக்கேல் ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.
இந்த படத்துக்கு ஏர்.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். ‘பீலே’ படத்துக்கு இசையமைத்ததற்காக ஏர்.ஆர்.ரகுமான் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட தேர்வு பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. சிறந்த பின்னணி இசை, பாடல் ஆகிய இரண்டு பிரிவுகளில் அவரது பெயர் தேர்வாகியுள்ளது.
2 ஆஸ்கார் விருது
சிறந்த பின்னணி இசை தேர்வு பட்டியலில் ஏர்.ஆர்.ரகுமான் பெயர் 145–வது இடத்திலும், சிறந்த தனிப்பாடல் பிரிவில் 90–வது இடத்திலும் இருக்கிறது.
பரிந்துரைக்கான இறுதிப்பட்டியல் ஜனவரி 24–ந் தேதி வெளியிடப்படும். ஏர்.ஆர்.ரகுமான் ஏற்கனவே 2009–ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏர்.ஆர்.ரகுமான் 1992–ம் ஆண்டு ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
ஜென்டில்மேன், காதலன், பம்பாய், முத்து, இருவர், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், எந்திரன் உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.