Home விமர்சனம் இந்திய சினிமாவில் ஓங்கி ஒலிக்கும் படம் ‘தங்கல்’

இந்திய சினிமாவில் ஓங்கி ஒலிக்கும் படம் ‘தங்கல்’

இந்திய சினிமாவின் பெருமிதப் பதிவுகளில் ஒன்றாக “தங்கல்” படம்
இடம் பிடித்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் இந்திய தேசத்தை
பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு வெற்றிக்காக இரண்டு
தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம்… இவையே படத்தின்
பிரதான களம். படம் பார்த்து வெளிவருவோரின் சில துளி கண்ணீரும்,
சில நிமிட அமைதியும் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது
என்பதற்கான சாட்சி… அப்படி ஓர் அழுத்தமான படைப்பை நம் முன்
வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும்
தயாரிப்பாளர்/நடிகர் அமீர்கான்.

இந்தியாவுக்காக சர்வதேச மல்யுத்தக் களத்தில் ஒரு தங்க
மெடலையேனும் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சிய விதையை
மகள்களின் மனதில் விதைத்து, அதை விருட்சமாக வளரச் செய்து, அது
நனவாகும் சமயம் உண்டாகும் சிக்கல்களை அமீர் கானால் சமாளிக்க
முடிகிறதா என்பதே படம். 2010- ல் காமல்வெல்த் விளையாட்டில்
பதக்கங்கள் வென்ற கீதா – பபிதா சகோதரிகள் வாழ்வில்,
உண்மையாகவே நடந்த நிகழ்வை, திரைக்கதையாக்கி, படமாக நமக்குக்
காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

1988 காலகட்டம்… அமீர்கான் பணிபுரியும் அலுவலகத்தின் டிவியில்
ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அலுவலகத்தின்
டேபிள், சேர்கள் ஓரம் வைக்கப்படுகின்றன. ஒலிம்பிக்கின் பின்னணி
வர்ணனையில் அமீர்கானும், சக ஊழியரும் மல்யுத்தம் போடும் அந்த
முதல் காட்சியிலேயே நம்மைப் படத்திற்குள் இழுத்துவிடுகிறார்கள்.
அங்கு தொடங்கும் லயிப்பு படத்தின் இறுதி நொடி வரை பற்றிப்
பரவுகிறது. படம் ஒரு நாவல் வாசிப்பு போன்ற அனுபவத்தைக்
கொடுக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப
பெற்றோர்கள் மாறி வரும் சூழலில், மகள்களிள் எதிர்காலத்தை
லட்சியமாக கொண்டு வாழும் தந்தையாக அசத்தி கை தட்டல்களை
அள்ளுகிறார் அமீர்கான்.

ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், அதற்கெல்லாம்
சிறுவயதுமுதலே அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது.
அதையே படம் உணர்த்துகிறது.

ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இழைத்துச் செதுக்கியிருக்கும்
படக்குழுவுக்கு எத்தனை பூங்கொத்துகள் பரிசாய் அளித்தாலும் தகும்.
படத்தில் அமீர் கேட்கும், ‘நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு ஒவ்வொரு
வீரனும் நெனைக்கறான். ஆனா அந்த வீரனுக்கு எதாவது செய்யணும்னு
நாடு நெனைக்கறதில்ல’ என்ற ஆதங்கத்திற்கு இனியாவது பதில்
கிடைத்தால் நலம்.

படத்தில், சிறுவயது கீதாவை முதன்முதலில் மல்யுத்தக் களத்தில்
இறக்குவார் அமீர். நான்கு ஆண்கள் நின்று கொண்டிருக்க,
‘இருப்பதிலேயே ஒல்லியாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்தால் இந்தப்
பெண் கொஞ்சம் வலியோடு தப்பிக்கலாம்’ என்று வேடிக்கை பார்க்கும்
பொதுமக்கள் பேசிக்கொள்வார்கள். கீதாவோ, இருப்பதிலேயே
வலிமையான ஒரு வீரனை தேர்வு செய்வார்.

கிட்டதட்ட அமீர்கானும் அப்படித்தான். பலரும் நோஞ்சான் கதைகளையே
எடுத்துக் கொண்டிருக்க, ஆழமான கதையைத் தேர்வு செய்து அதில்
வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்குப்
பரவசமளிக்கும் இந்தப் பயணம் பன்னெடுங்காலம் தொடரட்டும்!