நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை பல இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை என நடிகை சுஜா வருணி கருத்து தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா உலகில் காலெடுத்து வைத்தவர் சுஜா வருணி. கதாநாயகி இடத்தை பிடிக்க வந்த அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நடிகர், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை. தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடிகர், நடிகைகள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் தெரிவிக்காமலே, அவர்கள் நடித்த காட்சிகளை இயக்குனர்கள் கத்தரித்து விடுவார்கள். எனக்கு இது பல முறை நடந்துள்ளது.

இன்னும் பல நடிகர், நடிகைகளுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. காட்சிக்கு தேவையானது எது என்பது தெரியாத நீங்கள் ஏன் பணத்தையும், நடிகர்களின் திறமையையும் நேரம் செலவு செய்து வீணடிக்கிறீர்கள்.?

முக்கியமாக, வளர்ந்து வரும் நடிகைகள் கவுரவ வேடங்களில் நடிக்கவே கூடாது. அப்படி நடிப்பது பிரபலமான நடிகர்களுக்குதான் சரிபட்டு வரும். நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். விரைவில் வெற்றி பெறுவேன். யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.