பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட எஸ்பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஏ.ராஜராஜன், ஒய்.வில்லியம் வினோத் குமார் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் டி.ஹரிஷ் குமார், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் பாதுகாக்கவும், அவர்களது அடையாளங்களை வெளியிடாமல் இருக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான, நேர்மையான, பாரபட்சமில்லாத விசாரணையை நடத்தவும், விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்டதற்கு கோவை காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) ஆர். பாண்டியராஜனுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.