மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதியளிக்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மு.க.அழகிரி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு மு.க.அழகிரி வலியுறுத்தி வருகிறார். இதற்காக கடந்த 5-ஆம் தேதி சென்னையில் பேரணி ஒன்றை நடத்தி கலைஞர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார் அழகிரி.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அழகிரி. அதில், தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், திமுகவை பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்டிக் காத்தவரும், பல்வேறு சோதனைகளைத் தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவருமான கலைஞர் அவர்கள் இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மைத் தொண்டர்களும், தமிழர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றளவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

இத்தகு சிறப்பு மிக்க கலைஞர் அவர்களுக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில், தலைவர் கலைஞர் அவர்களின் ‘வெண்கல சிலை’அமைக்க அனுமதி வழங்கி உதவிட மிகவும் வேண்டுகிறேன் என அழகிரி தெரிவித்துள்ளார்.