கள்ளத்தொடர்பால் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் கணவன் தன் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மதுரை திருமங்கலம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் கிக்கடாசாம்பாளையத்தை சேர்ந்தவர் கிங்ஸ்டன் கிருபாகரன்(41). 10 வருடங்களுக்கு முன்பு செவிலியர் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது வேறு ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் கிருபாகரனிடமிருந்து விவாகரத்து பெற்று செவிலியர் சென்றுவிட்டார். மகள் தன்னிடமே இருக்கட்டும் என கிருபாகரன் விரும்பினார். எனவே, மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு செவிலியரை கிருபாகரன் வற்புறுத்தினார். ஆனால், செவிலியர் அதை ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

ஆனால், தாய் இல்லாமல் மகள் துயரப்படுவதை உணர்ந்த கிருபாகரன் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்தார். அதன்படி மதுரை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தந்தையும், மகளும் குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

கிருபாகரன் தனது பையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதில் ‘நான் எவ்வளவு நாள்தான் தாக்குபிடிக்க முடியும். நான் மிகவும் சோர்ந்து போய்விட்டேன். நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஜூலியும் என்னுடன் வருவதாக கூறியதால் அவளையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.