சமீபத்தில் ‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தபோது தன்ஷிகாவை டி.ராஜேந்தர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கியதை அனைவரும் மறந்திருக்க முடியாது. ஒரு பெண் என்றும் பாராமல், தெரியமால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் தன்ஷிகாவை தொடர்ந்து டிஆர் அவமானப்படுத்தியதை திரையுலகினர் கண்டித்தனர்.

இந்த நிலையில் முதல்முறையாக இந்த விஷயம் குறித்து மனம் திறந்து பொங்கியெழுந்துள்ளார் தன்ஷிகா. சமீபத்தில் நடந்த ‘விழித்திரு’ திறனாய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து தன்ஷிகா கூறியதாவது, “டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார்.

எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ, அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே, அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன்.

அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது.

அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத் துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்சினையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன்” இவ்வாறு தன்ஷிகா தெரிவித்தார்.