நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் சூர்யா கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று பதிலளித்திருந்தார். இதனையடுத்து, தமிழிசை சவுந்தரராஜானை சூர்யா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

அண்ணன் சூர்யா அவர்கள் நீட் தேர்வை பற்றி தமிழ் இந்து நாளேட்டில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார்.

அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா அண்ணன் ஒருபோதும் ஏற்க மாட்டார்.

கருத்த தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்கியமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா அண்ணன் நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு. அதைவிடுத்து இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல்வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா அண்ணன் எப்போதும் உறுதியாக இருப்பார். அகரத்தை பற்றியும், அண்ணன் சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும். செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல் என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள் என்ற அண்ணன் சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயல்படுகிறது, இனிமேலும் செயல்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், மதிப்பிற்குரிய மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.