சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் போஸ் வெங்கட் – சோனியா. தற்போது போஸ் வெங்கட் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் சமயத்தில், சோனியா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக போஸ் வெங்கட்டை மிரட்டியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு சோனியாவும், நான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எனது கணவரிடம் மிரட்டியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த மிரட்டல் நடந்தது சுமார் 13 வருடங்களுக்கு முன்பு என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது போஸ் வெங்கட்டுக்கு ஒரு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்திற்காக தனது தலைமுடி ஸ்டைல் எல்லாம் மாற்றிக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

அதேநேரத்தில், போஸ் வெங்கட்டுக்கு ஒரு சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அதே ஹேர் ஸ்டைலில் நடிக்குமாறு சீரியல் இயக்குனர் வற்புறுத்தியிருக்கிறார். போஸ் வெங்கட்டும் அதில் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயத்தை சோனியாவிடம் போன் போட்டு சொல்ல, அவர் டென்ஷனாகி படத்திற்காக போட்ட கெட்டப்புடன் சீரியலில் நடிக்க வேண்டாம், தொப்பி போட்டு நடியுங்கள் என்று சொல்லியுள்ளார்.

ஆனால், சீரியல் இயக்குனர் என்னை அந்த கெட்டப்பில்தான் நடிக்கச் சொல்கிறார் என போஸ் வெங்கட் மறுபடியும் மறுபடியும் சோனியாவிடம் சொல்ல, டென்ஷனான சோனியா மொட்டை மாடிக்கு ஏறிப்போய் தண்ணீர் தொட்டியில் ஏறி, நீங்கள் தொப்பி போட்டு நடிக்காவிட்டால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதன்பின்னர், சீரியல் நடிகர்கள், மற்றும் இயக்குனர் ஆகியோர் தொலைபேசியில் சோனியாவை தொடர்புகொண்டு, போஸ் வெங்கட் தொப்பி போட்டுதான் நடிப்பார் என்று சமாதானம் செய்தவுடன் அந்த தற்கொலை முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார் சோனியா.

அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் தனக்கு சங்கடமாக இருப்பதாக சோனியா தெரிவித்துள்ளார். 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்தான் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மற்றபடி, தற்போது போஸ் வெங்கட்டும் சோனியாவும் சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ‘கவண்’ படத்தில் போஸ் வெங்கட் நடித்திருந்த வித்தியாசமான கதாபாத்திரம் அனைவரும் கவர்ந்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.