அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவரது ஆடியோவில் உள்ள ஒருசில பேச்சுகளின்படி இந்த விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருசில எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த வதந்திகள் பரவி வருவதால் செய்தியாளர்களை சந்தித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்து வருகிறார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தான் தமிழக மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும், நிர்மலாதேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றும், அவரது முகத்தை கூட தான் பார்த்ததில்லை என்றும், தனக்கு பேரன்கள் இருக்கும் நிலையில் தன்மீது வீண்பழி சுமத்த வேண்டாம் என்றும் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

மேலும் சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு, தலையிட முடியாது என்பதால் தான் விசாரணை கமிஷனை அமைத்ததாகவும் அவர் கூறினார். இந்த விசாரணை கமிஷன் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும், அதன் பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்,