சசிகலா என்கிற பெயரைப் படத்தலைப்பாகப் பதிவு செய்துள்ளதாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது:

சசிகலா என்கிற பெயரில் ஒரு படத்தலைப்பைப் பதிவு செய்துள்ளேன். ஒரு அரசியல்வாதியின் நெருங்கிய நண்பரைப் பற்றிய படம். முற்றிலும் கற்பனைக் கதை. என் மனத்திலிருந்து எடுக்கப்படும் நேர்மையான காதல் கதை. அரசியலைத் தாண்டிய கற்பனைக் கதைகளுக்கு இதில் சம்பந்தமில்லை.

நான் ஜெயலலிதாவை மதிக்கிறேன். சசிகலாவை இன்னும் மதிக்கிறேன். வேறுயாரையும் விடவும் சசிகலாவை அதிகம் மதித்தார் ஜெயலலிதா. எனவே என் படத்துக்கு சசிகலா என்று பொருத்தமாகப் பெயரிடுகிறேன். ஜெயலலிதாவை அவருடைய பார்வையில் பார்ப்பதைவிடவும் சசிகலாவின் பார்வையில் பார்க்கவேண்டும். அப்போதுதான் அந்த வாழ்க்கை கவித்துவமாகவும் நேர்மையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ராம்கோபால் வர்மாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.