‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் ‘என்கேஜி’. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ஒரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்குகிறார்.

எஸ்.ராஜ் ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’படங்களை இயக்கிய கார்த்திக் ராஜீவிடம் உதவியாளராக இருந்தவர். அதோடு, பாகமதி படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை கொடுத்தார். இதையடுத்து ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜோதிகா புதுமுகு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் படம் இதுதான்.

தற்போது, மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து, ஜோதிகா நடிக்க உள்ள இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்குகிறது. சமுதாய அக்கறைக் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.