1940-1960களில் தமிழ் சினிமாவில், வழக்கத்தில் இருந்த நாடக பேச்சை மாற்றி, சாதாரண மக்களிடையே நிலவும் பேச்சு வழக்கை, தனது ஆழமான வலுவான கருத்துகள் மூலம், மக்களின் அபிலாஸை பெற்றவர் எம்.ஆர்.ராதா. இவர் ஒரு பகுத்தறிவு சிந்தனைவாதி.

இந்நிலையில், திங்கட்கிழமை (செப்.17-ம் தேதி) இவரது 39-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இவர் பெரிதும் மதிக்கும் தலைவர் பெரியாரின் 140-வது பிறந்த தினம் இன்று.

எம்.ஆர்.ராதா கடந்த 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி, பெரியாரின் 100-வது பிறந்த நாளில் இறந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

எம்.ஆர்.ராதா பற்றி அவரின் ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரு பார்வை:

நாடகத்தில் தொடங்கிய இவரது திரையுலக பயணம் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவையாளன் என பலவித கதாபாத்திரத்தில் நடித்தார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் இவர்களுக்கு இருப்பது போலவே எம்ஆர்.ராதா திரையில் வெளுத்து வாங்கும் கருத்து பேச்சுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

எம்.ஆர்.ராதவின் முழுப்பெயர் மதராஸ் ராசகோபால் ராதாகிருஷ்ணன்.

நாடகம், திரைப்பயணத்தில் எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதா தனது சிறுவயதிலேயே ஆலந்தூர் பாய்ஸ் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார்.

அதன்பிறகு 1942 வரை சந்தனத்தேவன், பம்பாய் மெயில், சத்தியவாணி, சோகாமேளர் ஆகிய படங்களில் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

ரத்தக்கண்ணீரும், பகுத்தறிவுவாதியுமான எம்.ஆர்.ராதா

அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கழித்து ‘ரத்தக் கண்ணீர்’ என்ற நாடகம் படமாக்கப்பட்டது. அதில் ஹீரோவாக நடித்து கலக்கியவர் எம்.ஆர்.ராதா. இப்படம் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் கவரப்பட்ட எம்.ஆர்.ராதா, திகவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். முற்போக்கு கருத்துக்களை தனது நாடகங்களிலும், திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார்.

கட்சிகளை கிழித்த தொங்கவிட்ட எம்.ஆர்.ராதா:

ஒரு காட்சியில் மேடையில் பேசும்போது, ‘தொழிலாளி கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி… இவங்களுக்கு இதே வேல, இந்தியாவுல குரோர்ஸ் (கோடி) கணக்கா கட்சி வச்சுட்டு இருக்கான்.

எல்லா கட்சியும் பிசினஸ்ல புகுந்துட்டான். ஒன்னுக்கும் லாய்க்கில்ல ஊருக்கு ஒரு கொள்கை, ஆளுக்கொரு தலைவன். நான்சென்ஸ் என்பார்.

பாலிடிக்ஸ் பேசுபவர்களுக்கு எம்.ஆர்.ராதவின் நெத்தியடி டயலாக் டெலிவரி:

ஒரு படத்துல பாலிட்டிக்ஸ் (அரசியல்) பேசுறான்… பாலிட்டிக்ஸ், பரதேசி பசங்க பாலிட்டிக்ஸ், என நக்கல் அடித்திருப்பார்.

எவன் செத்தா நமக்கென்ன என்று இருப்பவர்களுக்காக எம்.ஆர்.ஆரின் தெறிக்க விடும் வசனம்:

‘பலே பாண்டியா’ படத்தில் ஒரு கட்டடத்தின் முன்பு மக்கள் கூடியிருப்பாங்க. அந்த பக்கம் காரில் சென்ற எம்.ஆர்.ராதா, ‘எதுக்குடா இப்படி கூடியிருக்கீங்க’ என அங்கிருப்பவரை பார்த்து கேட்பார்.

அதற்கு ஒரு நபர், ஒருத்தர் மேல இருந்து குதிச்சு தற்கொலை செஞ்சுக்க போறாரு, அதான் என்பார்.

இதற்கு, எம்.ஆர்.ராதா, “அடப்பாவிகளா ஒருத்தன் தற்கொலை செஞ்சுக்குறத பார்க்கவா இப்படி கூடியிருக்கீங்க. நம்ம நாட்டுல எதுக்கு தான் கூட்டம் கூடுறதுனு அர்த்தமே இல்லாம போச்சு” என கூறுவார்.

அப்போது, பக்கத்தில் இருக்கும் ஒருவர், இவ்வளவு கூட்டத்துல அவன போய் காப்பாத்த ஒருத்தனுக்கு கூட தைரியம் இல்ல பார்த்தீங்களா சார் என்று சொல்வார்.

அதற்கு எம்.ஆர்.ராதா அளித்த சவுக்கடி பதில் என்ன தெரியுமா?”ஏம்பா நீ போய் காப்பாத்த வேண்டியது தான…எல்லாம் நல்லா பேசக் கத்துக்கிட்டிங்க” என்று சொல்லுவார்.

எம்ஜிஆரை சுட்டும், மிசா சட்டத்திலும் சிறைவாசம் அனுபவித்த எம்.ஆர்.ராதா:

கடந்த 1967ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் எம்ஜிஆரை அவரது ராமவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. இதன் காரணமாக சிறை தண்டனை பெற்ற அவர் 1967 பிப்ரவரி 12ம் தேதி முதல் 1971ம் ஆண்டு வரை சிறையில் இருந்தார்.

பின்னர் 1975ம் ஆண்டு இந்தியா நெருக்கடி நிலையை (இந்திரா காந்தி ஆட்சியின் எமர்ஜென்சி) சந்தித்த போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இறுதியில் பக்தி படத்தில் நடித்த பகுத்தறிவு சிந்தனையாளன் எம்.ஆர்.ராதா:

தீவிர முற்போக்குவாதியும், பகுத்தறிவு சிந்தனைவாதியுமான எம்.ஆர்.ராதா ‘வேலும் மயிலும் துணை’ என்ற பக்தி படத்திலும் நடித்தார்.

நூற்றாண்டின் ஆகச்சிறந்த நாயகர்களில் ஒருவராய் எம்.ஆர்.ராதா!

பெரியார் கூட தனது இறுதிகாலத்தில் பக்தி மார்க்க சிந்தனையில் இருந்ததாக ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. அது எந்தளவுக்கு உண்மை என்பது காலத்திற்கே வெளிச்சம்.

ஏன்?, மறைந்த நம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மஞ்சள் துண்டு பயன்படுத்துவதைக் கூட ஆன்மிக ரீதியாகத்தான் என்ற கருத்து பரவியது என்பது நினைவிருக்கட்டும்.

எது எப்படியோ, இவர்கள் இந்நூற்றாண்டு கண்டெடுத்த முத்துகள்! இவர்களின் கருத்துகள் பட்டிதொட்டியெங்கும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி கிடக்கின்றன எக்காலத்திலும் அழியாத பொக்கிஷமாய்…