மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்திர நாக்புயுர் (47) . இவரது மனைவி மீனா (40) . இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் -மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, மீனா, தத்தாரைநகரில் உள்ள தந்தையின் இல்லத்துக்கு தனது ஒரு குழந்தையுடன் சென்று விட்டார்.

இதையடுத்து, விவாகரத்துக் கோரி தம்பதியினர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே, நேற்று (செப்.11) இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, மீனா மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், ரவீந்திர நாக்புயர் கோர்ட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் தத்தாரைநகரில் உள்ள மாமனாரின் இல்லத்துக்குச் சென்ற ரவீந்திர நாக்புயுர், தனது மனைவியை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அதன்பின்பு, ரவீந்திரனும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

இச்சம்பவம் குறித்து, சக்கர்தரா காவல் துறையினர் வழக்குப்பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.