ரெவரி: ஹரியானாவில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் மஹேந்திரகர் மாவட்டத்தில், கடந்த 12-ம் தேதி மாணவி ஒருவரை கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஒரு பேருந்து நிறுத்தத்தில் தள்ளி விட்டுச் சென்றது.

பின்னர், அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஹரியானா காவல் துறையினர் 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் இந்திய ராணுவத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.

சந்தேகத்தின் பேரில், அந்நபரை கைது செய்த காவல் துறையினர் காவலிலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிப்புக்குள்ளான மாணவி ஹரியானா மாநிலத்தில், சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றவராவார்.