வடசென்னை பெண்ணாக மாறிய சாய் பல்லவி

பிரேமம் பட நாயகி ஒருவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில், தற்போது, இப்படத்தின் நாயகியாக ‘பிரேமம்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருந்ததாக வெளிவந்த செய்திக்கு படக்குழுவினர் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும், இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறியிருந்தனர்.

தற்போது, சாய் பல்லவியையே இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது. ‘பீமா’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் கேங்ஸ்டர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சில்வர் லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி ஒரேகட்டமாக நடத்தி முடித்து, மார்ச் மாதத்தில் முடிக்க முடிவு செய்துள்ளனர்.