நாளை தமிழகத்தின் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் (16-ந் தேதி) பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு புதிய புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

தற்போது இந்த புயலானது சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

6 மணி நேரத்தில் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கும்.

புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் கஜா புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் புயல் திசை மாறி ஆந்திரா பக்கம் செல்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை. 15-ந்தேதி மிதமான மழையும், 16-ந்தேதி பலத்த மழையும் மட்டுமே இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.