வெளிநாட்டில் படமாகும் விஜய்சேதுபதியின் மெகா பட்ஜெட் படம்

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கருப்பன்’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா நடிக்கவிருக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதியை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை பாரிஸில் நடத்தவிருக்கிறார்களாம். சுமார் 70 சதவீத படப்பிடிப்பு பாரிஸில்தான் நடக்கவிருக்கிறதாம்.

விஜய் சேதுபதி தற்போது ‘96’, ‘சீதக்காதி’, ‘ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தபிறகு கோகுல் இயக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.