முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

மருத்துவமனையில் இறந்த அவரது பூத உடல் ஆம்புலன்ஸில் வைத்து தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதிலாக வேறு இடம் தர அரசு தயாராக உள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவேரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் இல்லத்தின் முன்பும் திரண்டுள்ள தொண்டர்கள் வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒரு பதற்றமான சூழலே தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில், மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷிடம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று இரவு 10.30 மணிக்கு வருகிறது. இதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் திமுகவினர்.