சூடான் நாட்டை சேர்ந்த அமல் என்ற 11 வயது சிறுமிக்கும் 38 வயதான நபருக்கும் திருமணம் ஆனது. இந்நிலையில் அந்த சிறுமி கணவரின் கொடுமை தாங்காமல் விவாகரத்து கோரியுள்ளார்.

சூடான் நாட்டில் குறைந்த வயதான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள அமலின் வீட்டில் 6 பெண் பிள்ளைகள். அவர்களது குடும்பம் சாப்பிடுவதற்கே சிரமப்படுகிறது. இதனால் அமலின் தந்தை அவரை சிறிது வசதியான 38 வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்கு பின்னர் அந்த 11 வயது சிறுமியை அவரது 38 வயதான கணவர் அடித்து மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளார். தினம் தினம் கணவர் செய்யும் சித்திரவதைகளை தாங்க முடியாத அந்த பெண் தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் தந்தை திரும்பவும் அவரை கணவரிடமே திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள 11 வயதான சிறுமி அமல் கூறுகையில், இரவில் நான் அனுபவித்த வேதனைகள் அதிகம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள என்னால் இனிமேல் அவருடன் வாழ முடியாது என்பதால் தான் விவாகரத்து கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.