தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் சிபிசிஐடி விசாரணையில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதில் 100-வது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டால் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தமிழகத்துக்கே கரும்புள்ளியாக இது கருதப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சட்டத்தை மீறி, விதிகளை மீறி நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பதியப்பட்ட 5 வழக்குகள் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டன.

5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் துப்பாக்கி சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். அதில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சில தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இன்னும் மாவட்ட போலீசார் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கவில்லை. அவற்றை சிபிசிஐடி போலீசார் பெற்ற பின்னர் ஆய்வுக்கூட்டத்துக்கு அனுப்பி உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என கூறப்படும். அதன் பின்னர் தான் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டார்களா என்பது தெரியவரும்.