Home அரசியல் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: சபாநாயகர் உத்தரவு செல்லும், செல்லாது!

18 எம்எல்ஏக்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: சபாநாயகர் உத்தரவு செல்லும், செல்லாது!

ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகிய இருவவர் அடங்கிய அமர்வு இருவேறு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு திரும்பியதால் மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியிருந்தது. இதனையடுத்து இன்று 7-வது வழக்காக இதனை எடுத்த உயர்நீதிமன்றம் 1.30 மணியளவில் தீர்ப்பை வாசித்தது.

அதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தார். இதனையடுத்து தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி சுந்தர், 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வாசித்தார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.