தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு திரும்பியதால் மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட்டு அவரது நடவடிக்கையை ரத்து செய்தால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் ஏற்படும்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்களுடன் தற்போது நடத்திவரும் ஆலோசனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.