Home அரசியல் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு: எதிர்பார்ப்பில் தமிழகம்!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு: எதிர்பார்ப்பில் தமிழகம்!

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு திரும்பியதால் மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளதால் இன்று காலை முதலே சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்குவார்களா அல்லது மாறுபட்ட தீர்ப்பை வழங்குவார்களா?. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட்டு அவரது நடவடிக்கையை ரத்து செய்யுமா? அல்லது சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று வழக்கம் போல சொல்லுமா என பல எதிர்பார்ப்புகள் உள்ளன. காரணம் இந்த வழக்கின் தீர்ப்பில் தான் தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்குமா என்ற தலையெழுத்தே உள்ளது.