அடுத்த வருடன் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தற்போதே தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். இந்நிலையில் தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தை நேற்று முன்தினம் அமமுக தலைமை அலுவலகத்தில் நடத்தினார் தினகரன்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பேசிய தினகரன், தான் கடந்த 20 வருடங்களாக உளவுத் துறையோடு தொடர்பில் இருந்தவன் என கூறினார். தனக்கு எல்லாம் தெரியும். இப்போதும் உளவுத் துறையுடன் தொடர்பில்தான் இருக்கிறேன் என்றார்.

மேலும் 30 அமைச்சர்களில் எந்தெந்த அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் எங்கெங்கே சொத்துகள் வாங்கியுள்ளார்கள் என்ற முழு விவரமும் என் கையில் உள்ளது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தினகரன், ஆர்கே நகர் தேர்தலின் போது தம்பிதுரை தன்னை தொடர்புகொண்டு, நீங்கள் ஒரு தலைவர். அம்மாவுக்கு அடுத்தது நீங்கள்தான். தேர்தலில் தோல்வியடைந்து விடக்கூடாது. பார்த்துப் போட்டியிடுங்கள், வெற்றி பெறுவதுபோல் சூழ்நிலை இருந்தால் போட்டியிடுங்கள் உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துகள் என தெரிவித்ததாக தினகரன் குறிப்பிட்டார்.

தனக்கு உளவுத்துறையுடன் தொடர்பு உள்ளது என தினகரன் கூறியுள்ளதும், 30 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தன்னிடம் உள்ளது என அவர் தெரிவித்ததும் அதிமுக அமைச்சர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.