திருச்சியில் காட்டுப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் காணப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் முழுவதும் எரிந்த நிலையில் சடலாமாக இருந்துள்ளார். இதை கண்ட ஊர்மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெண் அணிந்திருந்த மஞ்சள் நிற சேலை பாதி எரிந்தும், கை விரல்களில் சில்வர் மோதிரங்கள் மற்றும் கழுத்தில் அம்மன் படம் பொருந்திய பித்தளை டாலரும், கால் விரல்களில் மெட்டியும் அணிந்திருந்தது தெரிய வந்தது.

அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என்ன கோணத்தில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.