சேலத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் வித்யா மந்திர் என்ற தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு கணித ஆசிரியராக சதீஷ் என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் அங்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த 1-ஆம் தேதி தங்கள் உறவினர்களுடன் அந்த பள்ளியை முற்றுகையிட்டு அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர் சதீஷால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.

சிறுமியிடம் நடத்திய இந்த விசாரணையில் ஆசிரியர் சதீஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து சதீஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.