சென்னை: சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ். இவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்களுக்கு தெரியாமல், 6 இடங்களில் ரகசியமாக கேமரா வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் விடுதியான அந்த வீட்டில் 7 பெண்கள் இரண்டு மாதங்களாக தங்கியிருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக கேமரா வைத்து ஆபாசமாக படம் எடுத்துள்ளார் சம்பத்ராஜ்.

ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

விடுதியில் இருந்த ஒரு பெண், முடியை உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்துவதுக்காக பிளக் சோக்கெட்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது அதன் உள்ளே கேமரா இருந்ததை கண்டு அதிர்ந்தார். இதையடுத்து, அந்த ஹாஸ்டல் பாத்ரூம், பெட்ரூம் என பல இடங்களிலும் ரகசிய கேமராக்கள் பறிமுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. விடுதியில் உள்ள 3 குளியலறைகளில் இருந்த மின்சார பிளக்குகளிலும், படுக்கை அறையில் இருந்த எல்.இ.டி. குண்டு பல்புகளிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார் சம்பத்ராஜ்.


தானாகவே இயங்கக்கூடிய அதிநவீன கேமராக்கள்

இது தொடர்பாக சம்பத்ராஜை ஆதம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். சம்பத்ராஜ், பெண்கள் விடுதியில் தொடர்ந்து 5 மணி நேரம் அளவுக்கு இயங்கக்கூடிய வகையில் அதிநவீன கேமராக்களை பொருத்தியுள்ளார்.

யாராவது நடமாடினாலோ, கதவு திறக்கும் சத்தம் கேட்டாலோ தானாகவே இந்த கேமராக்கள் இயங்கக்கூடியவை. சத்தம் நின்றுவிட்டால் கேமரா இயங்காது, பெண்கள் பாத்ரூம் கதவை திறந்ததும் ஆன் ஆகும் கேமரா, அவர்கள் வெளியே சென்றதும், நின்றுவிடும்.

இப்படியான கேமராக்கள் உளவுத்துறையால் பயன்படுத்தப்படுவது. அவை சம்பத்ராஜுக்கு எப்படி கிடைத்தன, வேறு யாருக்கும் இந்த கேமராவை வாங்கி கொடுத்தாரா என்பது பற்றியும், போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கு முன்பாக சில இடங்களில், கேமரா மூலம் சேகரித்த ஆபாச வீடியோக்களை காண்பித்து பெண்களை மிரட்டி சம்பத்ராஜ் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது செல்போன்கள், லேப்டாப்பில் கிடைத்துள்ள வீடியோக்களை வைத்து போலீசார் அதுகுறித்து விசாரிக்கிறார்கள். மேலும் பலருக்கும் பெண்களை சம்பத்ராஜ் விருந்தளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பத்ராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.