நேற்றுக் கரையைக் கடந்த ஃபானி புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. இந்த புயலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. பானி புயலால் மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் மற்றும் சூறாவளி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்செச்சரிக்கை செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு புவனேஸ்வர் விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் இன்று ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு புயல் கரையைக் கடந்த பின்னர் சூறாவளிக் காற்றும் பேய்மழையும் பெய்யத் தொடங்கியது. பஸ்கள் போன்ற கனரக வாகனங்களையே தூக்கி வீசும் வீடியோக் காட்சிகள் வெளியாகின. மேலும் கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கியுள்ளன.

முழுமையான பாதிப்புகள் குறித்த விவரம் தெரிய இன்னும் ஒருவாரக் காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 160 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக் காட்சிகள் வெளியாகி காண்போர் மனதை கணக்கச் செய்கின்றன.