சமீபத்தில் வந்த ஜுங்கா படம் கூட வெளிநாட்டில் எடுக்கப்பட்டதுதான். இது போல ஏராளமான படங்கள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்று படமாக்குவதெல்லாம் இப்போதைய நாகரீக உலகில் சர்வ சாதாரணம். அப்படியே அந்த பாடலை வெளிநாட்டில் சென்று படமாக்கினாலும் அது மிகப்பெரும் வெற்றி பெறுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

95களுக்கு பிறகு வெளிநாடுகளில் சென்று பல படங்கள் சர்வ சாதாரணமாக எடுக்கப்படுகிறது .60களில் ஆரம்பித்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் வரை ஓ இந்த படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டதா என்று ஆச்சரியமாக கேட்கும் நிலை முன்பு இருந்தது தற்போது அப்படி இல்லை.

வெளிநாடு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

பெரும்பாலும் வெளிநாடுகளில் அழுகாச்சி படங்கள் எதுவும் எடுத்து வருவதில்லை, கடத்தல், கொலை, என க்ரைம் சப்ஜெக்ட் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வந்துள்ளன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட பக்திப்படங்களில் கூட அப்படி ஒரு நிலை இருந்தது.

வெளிநாடுகளில் எடுத்ததற்காகவும் எந்த நாட்டை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறதோ கதை முழுவதும் அதை சுற்றியே நகர்வதாக சிறந்த திரைக்கதை அமைத்து, பாடல்களையும் வெறும் டூயட்டுக்காக என்றில்லாமல் கதையின் நகர்வுக்கேற்ப வெளிநாட்டிலேயே படமாக்கி வெற்றி பெற்ற சில புகழ்பெற்ற திரைப்படங்களை பார்க்கவே இந்த பதிவு.

எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்து எம்.ஜி.ஆர் அவர்களே டைரக்சனும் செய்த படம் ஆராய்ச்சியாளராக முருகன் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் உடல் ரீதியான ஒரு கொடூரமான நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர்

அந்த பார்முலாவை ஆட்டையபோடுவதற்காக வில்லன் கோஷ்டிகள் என இந்தியாவில் ஆரம்பிக்கும் முயற்சிகள் ஒரு கட்டத்தில் இனி இங்க வச்சு ஷூட் செஞ்சா சரிப்படாதுன்னு ஆராய்ச்சிகளுக்காக பல நாடுகள் எம்.ஜி.ஆர் செல்ல, சிங்கப்பூர், மலேசியா, சீனா,ஹாங்காங், தாய்லாந்து, டோக்யோ என பல நாடுகளில் வில்லன்கள் எம்.ஜி.ஆரை பாலே செய்து துரத்த, அங்கு சண்டைக்காட்சிகள் அரங்கேற, எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு செமயான விருந்தாக வந்த படம்.

படம் வந்து பல வருடங்கள் ஆகியும் டிவி உரிமம் இல்லாமல் இருந்த படம் சமீப நாட்களாகத்தான் இதை டிவியில் பார்க்க முடிகிறது. லில்லி மலருக்கு கொண்டாட்டம், பன்சாயி,சிரித்து வாழ வேண்டும் என சிறப்பான பாடல்களும் ஒவ்வொரு நாட்டிலும் எடுக்கப்பட்டு ரசிகர்களுக்கு கொள்ளை விருந்தாக அமைந்தது. வெளிநாட்டின் பிரமாண்ட அழகை அள்ளி வந்த படம் இது.

ஜெய்சங்கர் நடித்து பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி சசி இயக்கிய ஒரே வானம் ஒரே பூமி என்றொரு திரைப்படம் இதுவும் சில கிழக்காசிய நாடுகளில் எடுக்கப்பட்டு ஒரளவு வெற்றியை பெற்றது.இருந்தாலும் பெரிய அளவில் இந்த படம் பிரபலமாகவில்லை.

வெளிநாடுகளில் பக்திப்படம் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளதா என்றால் பெற்றுள்ளது அதுவும் சாதாரண வெற்றி இல்லை மிகப்பெரும் வெற்றி. ஏனென்றால் அந்த கால கட்டத்தில் பக்தி படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். ஏ.பி நாகராஜன் அவர்கள் புராணப்படங்களை குறிப்பாக திருவிளையாடற்புராணம் என்றால் அதன் முக்கிய நிகழ்வுகளை எடுத்து திரைக்கதை அமைத்து அப்படியே இயக்கினார் இது ஒரு தனி ரகம்.

முருகனின் அற்புதங்களை தத்ரூபமாக பக்திக்காவியமாக சொன்ன தேவரின் பக்திப்படங்களுக்கு ஒரு கிராக்கி இருந்தது எல்லாமே அதாவது புராண ரீதியாக நடந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டை சுற்றி மட்டுமே இருக்குமா உலகம் முழுவதும் தெய்வங்கள் இல்லையா, இல்லை சிங்கப்பூர் மலேசியா பக்கம் எல்லாம் தெய்வங்கள் இல்லையா அங்கே நம் தமிழ் மக்கள் இல்லையா என்ற ரீதியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் வருவான் வடிவேலன்.

இதையும் படிங்க பாஸ்-  கூகுள் குழப்பியடிக்கும் தமிழ்ப்பட டைட்டில்கள் ஒரு பார்வை

மோசமான நடத்தை கொண்ட மனிதனுக்கும் ஒரு முருகபக்தையான பெண்ணுக்கு ஏற்படும் போராட்டங்களே கதை, சிங்கப்பூரில் நடப்பது போல் படமாக்கப்பட்ட இக்கதை அந்த நேரத்தில் வெளிவந்து தாய்மார்களால் கொண்டாடப்பட்டது.

ஜெய்கணேஷ், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக இப்படத்தில் சிங்கப்பூரில் நடக்கும் தைப்பூசம், மலேசியாவில் பிரமாண்டமாக நடக்கும் தைப்பூச திருவிழாக்கள் மிக பிரமாண்டமாக காட்டப்பட்டது. அந்தக்காலத்தில் பல கோவில்கள் சென்று தரிசிக்க நினைக்கும் பக்திப்பட விரும்பிகள் இந்த பிரமாண்ட காட்சிகளை கண்டு ரசித்தனர்.

ஏனென்றால் இப்போது நினைத்தால் யூ டியூப்பில் ஆயிரம் விழாக்களை இது போல கண்டுகளிக்கலாம் அப்போது அப்படி ஒரு வசதி இல்லை அல்லவா முருகன் கோவில் விழாக்களையும், வெளிநாட்டு முருகன் கோவில்களையும் மிக பிரமாண்டமாக கண்டு ரசித்தனர்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்டு நீண்ட நாள் ஓடிய படம் இது. இதை தயாரித்தவர் கே.என் சுப்பு என்ற தயாரிப்பாளர், பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களின் உறவினர் இவர்.

சொல்லப்போனால் பெரும்பாலும் அந்தக்கால கட்டங்களில் வெளிவந்த சிங்கப்பூர் மலேசியா டைப் படங்கள் யார் இயக்கத்தில் வந்த படமாக இருந்தாலும் கே.என் சுப்பு  பங்கு அதிகம்இருந்திருக்கிறது. தயாரிப்பாளராகவோ, இணை தயாரிப்பாளராகவோ அல்லது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தும்போது உதவிகரமாகவோ இருப்பதுதான் இவர்களது எஸ்.பி.டி பிலிம்ஸின் பங்கு. பின் நாட்களில் ரஜினி, கமல்னு யார் வெளிநாட்டு படங்களில் நடித்தாலும் கே.என் சுப்புவே தயாரித்தார். அல்லது இணை தயாரிப்பாளராக இருந்தார்.

இயக்குனர் சிகரம் என அறியப்பட்ட பாலச்சந்தர் 70களில் செம பிஸியாக இருந்த இயக்குனர் ஆவார். கமலஹாசனின் டீன் ஏஜ் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் இவரின் கை வண்ணத்தில் வந்த படங்களேயாகும்.

சிங்கப்பூர் செல்லும் இசைக்குழு அங்கே கமல், ரஜினியின் காதல்கள் மோதல்கள் என எல்லாம் கலந்து ஒரு கமர்ஷியல் காக்டெயிலாக சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட படம் நினைத்தாலே இனிக்கும். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட பாடல்கள், குறிப்பாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் சிங்கப்பூரை பற்றி விரிவாக கேமராவலேயே விளக்கிய பாடலாக இருந்தது. பி.எஸ் லோக்நாத் என்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மிக சிறப்பான முறையில் சிங்கப்பூரின் அழகை அள்ளி வந்து ரசிகர்களிடம் ஒப்படைத்து வெற்றிபெற்ற படம் நினைத்தாலே இனிக்கும்.

இது போல அதே நேரத்தில் வந்த மற்றொரு கமர்சியல் படம் ப்ரியா,  சுஜாதா எழுதிய கதை. சுஜாதா எழுதிய நாவலில் பிரதான பாத்திரமாக வருவது கணேஷ் என்ற கதாபாத்திரமே, இந்த படத்திலும் அப்படியான கணேஷ் என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். ஸ்ரீதேவி இப்படத்தில் நடித்திருந்தாலும் ஸ்ரீதேவி ரஜினிக்கு ஜோடி இல்லை.

அவர் ஒரு நடிகை சூட்டிங்குக்காக சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீதேவி படத்தின் இயக்குனாராலேயே ஒரு கொடிய கும்பலில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற சிங்கப்பூர் செல்லும் கணேஷாக ரஜினி , சிங்கப்பூர் சதிகாரர்களிடம் இருந்து ஸ்ரீதேவியை மீட்டுக்கொண்டு வரும் வெற்றிக்கதையே ப்ரியா படத்தின் கதை.

இதற்கு முன்பல படங்களை வெளிநாடுகளில் படமாக்கி இருந்தாலும் இந்த படம்தான் மிக சிறப்பான முறையில் சிங்கப்பூரை கலர்புல்லாக காண்பித்தது எனலாம்.

பச்சைபசுமை சிங்கப்பூர், விளக்கு ஒளியில் மிளிரும் கலர்புல் கடைவீதிகளின் காட்சிகள் என பிரமாதப்படுத்தினார்கள். அக்கறை சீமை அழகினிலே என்ற ஜேசுதாஸின் பாடல் இளையராஜா இசை போன்றவை சிங்கப்பூரை இன்னும் மெருகேற்றி காட்டியது. பிரபல ஒளிப்பதிவாளர் பாபு சிங்கப்பூரின் அழகை அள்ளி வந்திருப்பார்.

சிங்கப்பூர் மட்டுமல்லாது ஹாங்காங்கிலும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தையும் தயாரித்தது கே.என் சுப்புதான். எஸ்.பி முத்துராமன் இயக்கி இருப்பார்.

இதையும் படிங்க பாஸ்-  டி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் ரசிகர்கள் ஆர்வம்

கே.என் சுப்பு தயாரித்த மற்றொரு படம் உல்லாசப்பறவைகள். சிவி.ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த படமிது. மனநல ரீதியாக பாதிக்கப்பட்ட கமலஹாசன் பாரிஸுக்கு சிகிச்சைக்கு செல்வது போலவும் காதலியாக ரதியும் நடித்திருந்தனர்.

பாரிஸின் அழகை முதல் முறையாக அள்ளி வந்தது இப்படம். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற அழகு ஆயிரம் உலகம் முழுவதும், ஜெர்மனியின் செந்தேன் மலரே போன்ற பாடல்கள் பாரிஸின் அழகை இன்னும் மேம்படுத்தி காட்டின என்றால் மிகையாகாது.

இதே போல் கே.என் சுப்பு இணை தயாரிப்பாளராக, பஞ்சு அருணாசலம் தயாரிப்பாளராக, எஸ்.பி முத்துராமன் இயக்க, கமல் நடிக்க கல்யாணராமனின் இரண்டாம் பாகம் போல தயாரான ஒரு படம் ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம்.

பத்திரிக்கை தொழில் செய்யும் போட்டியில் வில்லனாக சத்யராஜ், நாயகனாக கமல், காமெடிக்காக கல்யாணராமன் கமல்ஹாசனின் ஆவி போன்றவை ஜப்பான் செல்வதாகவும் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் டிங்குவும் நடித்திருந்தார்கள்.

ஜப்பானின் அழகை இப்படம் போல் எதுவும் காண்பித்ததில்லை என அடித்து கூறலாம் எத்தனையோ படங்கள் ஜப்பானில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த படத்தில் வரும் சின்னப்பூ சின்னப்பூ பாடலில் ஜப்பானை அவ்வளவு அழகாக காண்பித்திருப்பார் ஒளிப்பதிவு இயக்குனர் டி.எஸ் விநாயகம் அவர்கள், ஜப்பானில் புகழ்பெற்ற எக்ஸ்போ கண்காட்சி இது 85ல் வந்த படம் என்பதால் எக்ஸ்போ 85 என்ற புகழ்பெற்ற கண்காட்சியை ஒரு பத்து நிமிடம் இந்த படத்தில் காண்பிக்கப்படும்.

படத்தின் கதைக்கு இது அவசியம் இல்லாத காட்சி என்றாலும் அவ்வளவு அழகாக நடக்கும் எக்ஸ்போ 85ன் காட்சிகளை எல்லோரும் காணவேண்டும் என்பதற்காகவே படத்தில் வைக்கப்பட்டிருக்கும் இன்றும் அதை பார்த்து ரசிக்கலாம்.

வி. அழகப்பன் இயக்க ஆர்.டி பர்மன் இசையில் வெளிவந்த காதல் படம் பூ மழை பொழியுது சுரேஷ் , நதியா, விஜயகாந்த் இவர்களுக்குள் ஏற்படும் முக்கோண காதல் கதையே பூமழை பொழியுது. மென்மையான பல அம்சங்களுடன் சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட இப்படமும் ஓரளவு வெற்றியை பெற்ற படம்தான்.

நதியா நதியா நைல் நதியா, ஏ மாமா ஏ மாமா போன்ற பாடல்கள் புகழ்பெற்றது. இதே போல் இயக்குனர் திலகம் என அறியப்பட்ட கே.எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் வந்த காவியத்தலைவன் திரைப்படம் தேவர் மகன் போன்ற படங்களோடு வந்து வெற்றிபெற முடியாமல் போனது பானுப்பிரியா இரட்டை வேடங்களிலும் விஜயகாந்தும் நடித்திருந்த குடும்ப படம் முழுக்க சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டது.

கே.என் சுப்பு தயாரித்த மற்றொரு வெளிநாட்டுப்படம் ஊருவிட்டு ஊரு வந்து திரைப்படமாகும். பழி வாங்கும் சிங்கப்பூர் பெண்ணின் ஆவி என்ற ரீதியில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படமும் ஓரளவு வெற்றி பெற்றது, கவுண்டமணி, செந்தில், ராமராஜன், கெளதமி என நட்சத்திர பட்டாளங்களுடன் சிங்கப்பூரில் கதை நகர்வதாக மிக சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருந்தது. அந்த நாட்ல போய் நம்ம நாட்ட புகழ்றது ராமராஜனாலதான்யா முடியும் என்ற வகையில் கேலி கிண்டல்கள் அந்த நேரத்தில் ஒலித்தது. அதற்கு காரணம் மிக சிறப்பாக சிங்கப்பூரை காண்பித்து அந்த பேக்ரவுண்டில் ராமராஜன்,கெளதமி பாடுவதாக காண்பிக்கப்படும் சொர்க்கமே என்றாலும் பாடல், இன்று வரை இந்த இசைஞானி, ஜானகி பாடிய பாடலை அடிக்க எந்த பாடலும் வரவில்லை என்பதே உண்மை.

90களுக்கு பின் நிறைய படங்கள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டாலும் 90களின் இறுதியில் வந்த ஜீன்ஸ் திரைப்படம் ஏதோ அமெரிக்காவுல படம் எடுத்துருக்காரம் சங்கர் என்ற ரீதியில் மக்களை பேசவைத்தது. ஏனென்றால் அமெரிக்காவில் மிகப்பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் அதுவரை எடுக்கப்பட்டதில்லை. முதல் முறையாக அமெரிக்காவை அசோக்குமாரின் ஒளிப்பதிவை அள்ளிவந்ததும் உலக அதிசயங்களை அள்ளி வந்ததும் இப்படம்தான். சங்கர் மீது அப்போது இருந்த அதிகப்படியான எதிர்பார்ப்பு காரணமாகவும் இப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை

பிரசாந்த் நடிக்க அகத்தியன் இயக்கத்தில் வந்த காதல் கவிதை திரைப்படமும் சுந்தர்சி இயக்கிய லண்டன் திரைப்படமும் லண்டனின் அழகை காட்டியது.

நாசர் இயக்கிய தேவதை திரைப்படத்தின் ஆரம்ப பகுதி துபாயின் அழகை முதன் முதலில் அள்ளி வந்த படம் எனலாம் இளையராஜா பாடியா நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பெளர்ணமி என்ற ஒற்றைப்பாடலிலேயே துபாயின் மொத்த அழகையும் அள்ளி இருப்பார்கள்.

அதற்கு பின் எகிப்து பாலைவனத்தில் ரஹ்மானின் இசையில் படமாக்கப்பட்ட சந்தன தென்றலில் என்ற கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படப்பாடல், திருமலையில் இடம்பெற்ற நீ என்பது எதுவரை எதுவரை, பாடல், ஜோடி படத்தில் கனடாவின் நயாகாரா அருவியின் அழகை அள்ளிவந்த காதல் கடிதம் தீட்டவே, பாடல், போன்ற பாடல்களை கூறலாம்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக விருமாண்டிக்கு முன்னதாக கமல் தயாரித்த படம் நள தமயந்தி, பாலக்காட்டில் இருந்து சமையல் வேலைக்கு செல்லும் அப்பாவி பிராமணப்பையன் ஆஸ்திரேலியாவில் படும் துயரங்களை கொஞ்சம் காமெடி கலந்து படமாக்கப்பட்டிருந்தது மெளலி இயக்கி இருப்பார்.ஆஸ்திரேலியாவின் அழகை இந்தப்படம் கொஞ்சம் விரிவாக காண்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாதேஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம் திரைப்படம் கனடாவின் அழகை காண்பித்தது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் முதன் முதலில் விரிவாக இலங்கையை காண்பித்த படம் எனலாம். மாதவன் ,சிம்ரன் நடிப்பில் இலங்கையின் அழகை அள்ளிவந்த படம்.குறிப்பாக அந்த நெஞ்சில் ஜில் ஜில் பாடலில் புத்தர் சிலை அருவி என மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. முக்கியமாக இலங்கை போரின் வலியை உணர்த்திய படம் இது.

2007ல் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வந்த பில்லா படம் அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது காரணம் மலேசியாவிலேயே முழுப்படமும் எடுக்கப்படுவதும் அதற்கு முன் தமிழில் வந்த பில்லாவின் ரீமேக் படம் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் ரஜினி நடித்து வந்த பில்லா திரைப்படம் போலவே இது கதை அமைக்கப்பட்டு சில மாறுதல்களோடு ஸ்டைலான கேங்ஸ்டர் படமாக வந்து வெற்றி பெற்றது.

முழுக்க முழுக்க மலேசியாவிலேயே சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டன.

ஸ்டைலான பின்னணி இசை ஸ்டைலான கேங்ஸ்டர்கள் என இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. மலேசியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் வைத்து எடுக்கப்பட்ட சேவல் கொடி பறக்குதடா என்ற முருகன் அதிரடிப்பாடல் அஜீத் ரசிகர்களின் செல்போன் ரிங்டோனாக இன்னும் ஒலிக்கிறது.

சூர்யா நடித்த அயன் படத்தின் சண்டைக்காட்சிகள் சில ஆப்ரிக்கா நாடுகளிலும் அயன் படத்தை இயக்கிய கே.வி ஆனந்தின்  மற்றொரு படமான அனேகன் திரைப்படத்தில் பர்மாவின் அழகையும் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டது. குண்டு சத்தம், தாலிபான் தீவிரவாதம் என அறியப்பட்ட பகுதிகளில் கமலின் இந்த திரைப்படம் முதன் முதலில் படமாக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது.

இப்போதைய ஜூங்கா வரை பல படங்கள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டாலும் இப்போதைய ஆண்ட்ராய்டு உலகத்தில் இணையத்தில் தட்டியவுடன் பாரிஸை பற்றியோ அமெரிக்கா பற்றியோ ஹெச்டி வடிவத்தில் வீடியோவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அதனால் இப்போதெல்லாம் வெளிநாட்டில் படம் எடுத்தாலும் அது ஒரு பெரிய மரியாதையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை அப்போது வந்த படங்களில் வாவ் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமா என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அது தற்போது இல்லை.