நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக அரசியலில் குதித்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவர் கட்சி ஆரம்பித்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் பல விளக்கங்களை கூறியுள்ளார். மேலும் ஒரு அரசியல் கட்சி தனக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் தர பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நடிகர் கமலின் அந்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் பினவருமாறு.

நாங்கள் உண்மையான சாதனைகளை நிகழ்த்தவே, இலக்குகளை அடையவே விரும்புகிறோம். கிராமங்களை சிறந்த முறையில் மேம்படுத்த எட்டு கிராமங்களை முதற்கட்டமாக தத்தெடுத்துள்ளோம். டாஸ்மாக் கடைகளை ஒரேயடியாக மூடுவது தீர்வாகாது. ஒவ்வொரு கிராமங்களிலும் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

தலைமை செயலகத்தில் வெறுமனே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்காமல், மாற்றத்தை கொண்டு வரவே விரும்புகிறோம். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தற்போது கூற முடியாது. எல்லா கட்சிகளின் கொள்கைகளுடனும் எனக்கு கொள்கை ரீதியாக மாறுபாடு உண்டு.

ஆனால் தமிழக அரசியலில் நான் முழுமையாக வேரறுக்க நினைப்பது ஊழலைத்தான். அதைத்தான் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். எனக்கு கூட ஒரு கட்சி லஞ்சம் தர பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர 100 கோடி ரூபாய் தவருவதாக சொன்னார்கள். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன் என தெரிவித்தார். கமல் அப்படியே அந்த கட்சியின் பெயரை சொன்னால் சிறப்பாக இருக்கும். அவரது பேச்சின் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.