இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா உலகில் இசையமைக்கத்  தொடங்கி இன்றோடு 25 வருடங்கள் கடந்துவிட்டன.

பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குனர் மணிரத்னம் தனது ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது.

அந்த படத்தில் அவர் கொடுத்த இசை புதியதாகவும், வேறு மாதிரியும் இருந்தது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை யார் இவர்? என ஆச்சர்யமாக பார்த்தார்கள். அதன் பின் ஜென்டில்மேன், காதலன் என அவர் காட்டிய இசை துள்ளல் அனைவரையும் ஆட செய்தது.

இசைப்புயல் என்ற பட்டம் அவருக்கு வந்து சேர்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று தமிழனுக்கு பெருமை சேர்த்தார். ரோஜா திரைப்படம் ஆகஸ்டு 15ம் தேதி 1992ம் ஆண்டு வெளியானது. இன்றோடு, இசையுலகில் 25 வருடங்களை கடந்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.இத்தனை வருடங்கள் அவர் கொடுத்த இசையின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல், வெளிநாட்டில் வாழும் இசைப்பிரியர்கள் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார். கோலிவுட் தொடங்கி, பாலிவுட் சென்று, அதன் பின் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான்.

இந்த பொன்னாளில் அந்த ஆஸ்கார் நாயகனின் 25 வருட கலை சேவையை நினைவு கூர்வோம்…