மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நேற்று சென்னையில் கலைஞர் புகழஞ்சலி நடந்தது. இந்த கூட்டத்துக்கு அகில இந்திய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சோம்நாத் பாரதி, 80 ஆண்டுகால அரசியல் வாழ்வைக்கொண்ட மிகப்பெரிய தலைவர் கலைஞர். புதுச்சேரி முதல்வர் ஆளுநர் பதவி எதற்கு என்று இப்போது கேட்கிறார், டெல்லியில் உள்ள எங்களுக்கும் அந்த சந்தேகம் உள்ளது, ஆனால் ஆளுநர் எதற்கு என பல வருடங்களுக்கு முன்பே கேட்டவர் கலைஞர்.

சிறுபான்மையினரின் உரிமை குறித்து முதன் முதலாக கலைஞர் தான் பேசினார், சுயமரியாதை குறித்து பேசியவர், முதல்வர்கள் கொடியேற்ற வேண்டும் என முதன்முதலில் பேசியவரும் அவரே என்றார். மேலும் பாரதமாதாவின் உண்மையான பிள்ளையான கலைஞருக்கு பாரதரத்னா வழங்க எங்களின் கட்சியின் மூலம் ஆதரவளிக்கிறோம் என்றார் சோம்நாத் பாரதி.