முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இறந்த அவரது பூத உடல் ஆம்புலன்ஸில் வைத்து தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல்.

அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் பிரபல நடிகர் அஜித்குமார் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.