ஹெச்.வினோத் இயக்கத்தில், சதுரங்க வேட்டை திரைப்படம் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி , மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் பலரின் வாழ்க்கைக்கு ஒரு பாடமாக அமைந்தது மட்டுமின்றி, மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் 2-ஆம் பாகம் சதுரங்க வேட்டை 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இதில் நடிகர் அரவிந்த்சாமி, த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரித்துள்ளார்.

ஆனால், இப்படம் வெளியாகாமல் இழுபறி நீடித்து வருகிறது. படத்தின் வெளியீட்டிற்காக, படக்குழுவினர் நீண்ட நாட்களாக சரியான நேரம் எதிர்பார்த்துக் காத்து வருகின்றனர் .

இந்நிலையில் அரவிந்த்சாமி தனக்கு வரவேண்டிய ரூ.1.79 கோடி சம்பள பாக்கி வரவில்லை எனவும், அதனை தயாரிப்பாளர் மனோபாலா தர வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த்சாமி தரப்பில் வழக்குரைஞர் வாதிடுகையில்,

படத்தின் வெளியீட்டை தடுப்பது தங்களது நோக்கமல்ல. எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை தந்தால் போதும் என கேட்டுக் கொண்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி சுந்தர், வழக்கை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் மனோபாலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.