நடிகர் ஜெய் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, தனது சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கார் அடையாறு மலர் மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் நடிகர் ஜெய்யும், அவரது நண்பரும் காருக்குள்ளேயே மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யையும், அவரத நண்பரையும் தட்டி எழுப்பினர். அப்போது இருவரும் காருக்குள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, அவர்கள் அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிகவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கெனவே, ஜெய் இதுபோல் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் வெளியானது.