நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று போயஸ்கார்டன் சென்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இன்று ரஜினியின் மனைவி லதாவின் பிறந்த நாள். அதேபோல், ரஜினி நடித்த பாஷா படம் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகவுள்ளது.

இது அனைத்திற்கும் கருணாஸ் வாழ்த்து தெரிவித்ததாக தெரிகிறது. அதன்பின் அங்கிருந்து வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

மரியாதை நிமித்தமாகவே அவரை நான் சந்திக்க வந்தேன். நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற போது, அவர் எனக்கு தொலைபேசியில் வாழ்த்து செய்தி கூறினார். எனவே, எம்.எல்.ஏ.வான பின்பு அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்தேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை.

டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் கூறும் கருத்திற்கு நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. சமீபத்தில் கூட என் தொகுதிக்கு சென்றேன். மக்கள் என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில், என்னை பிடிக்காதவர்கள் என்னை பற்றி தவறாக எழுதி வருகிறார்கள். ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” எனக் கூறினார்.