நடிகர்கள் அரசியலுக்கு வருவதுதான் தற்போது தமிழக அரசியலில் டிரெண்டாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் பார்த்திபன், நான் அரசியலுக்குக் கட்டாயம் வருவேன் என கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் சினிமாவில் நடித்து பின்னர் அரசியலுக்கு வந்து, தங்களுக்கான இடத்தை வலுவாக பதித்தவர்கள். ஏன் கருணாநிதி கூட சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான்.

இவர்களை போன்று பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. விஜயகாந்த், சரத்குமார் என பல நடிகர்களை கூறிக்கொண்டே போகலாம். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவானது.

இந்த சூழலை பயன்படுத்தி நடிகர்கள், ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கமல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். இந்நிலையில் புதிதாக நடிகர் பார்த்திபனும் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன், நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன். அதற்காகக் கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளேன். 18 எம்எல்ஏக்கள் வழக்குத் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் பற்றி தெரியாது. அதற்காகத்தான் கால அவகாசம். மேலும் எஸ்.வி. சேகரை இது வரை கைது செய்யாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றார்.