சில வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார்.

ரஜினி ஒவ்வொரு வருடமும் தனது ரசிகர்களை, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து உரையாடுவதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்வார். கடைசியாக, ‘சிவாஜி’ பட வெற்றிக்கு பின் அவர் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின் கடந்த 9 வருடங்களாக அவர் ரசிகர்களை அவர் சந்திக்கவில்லை.

இதையடுத்து, அவரை சந்திக்க வேண்டும் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள், ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவிடம் அழுத்தம் கொடுத்து வந்தனர். பலர் கடிதங்களும் அனுப்பி வந்தனர். எனவே, வருகிற ஏப்ரல் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை அவர், அதே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும், ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 6 நாட்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை அவர் சந்திக்க இருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஜெ.வின் மறைவை தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என அவரின் ரசிகர்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த சந்திப்பில் அவரை அரசியலுக்கு வருவதற்கு அழைப்பு விடுப்போம் என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், ஏற்கனவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகள், அவருக்கு பல நெருக்கடிகளையும், ரசிகர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தது. ஜெயலலிதாவை நேரிடையாகவே எதிர்த்து குரல் கொடுத்த ரஜினி, தனது மகள் திருமணத்திற்கு அவரிடமே சென்று அழைப்பிதழ் கொடுத்து சரண்டர் ஆனார். மேலும், அரசியல் பற்றி பேசுவதை தவிர்த்தே வந்தார் ரஜினி. ஒரு கட்டத்தில் அரசியலே வேண்டாம் என அவர் முடிவெடுத்து விட்டது போலவே அவர் நடந்து கொண்டார். தற்போதும் நடந்து வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன், சமீபத்தில் அவரை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கேட்டார். ரஜினியும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். எனவே, ரஜினி ரசிகர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என பாஜக கணக்குப் போட்டது. ஆனால், பதறியடித்த படி அடுத்த நாளே, இந்த தேர்தலில் யாருக்கும் எனது ஆதரவில்லை என ரஜினி அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில்தான் ரசிகர்களின் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பில் ரஜினி அரசியல் தொடர்பாக எதுவும் பேசமாட்டார். ரசிகர்களோடு உரையாடி, அவர்களுடன் புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொள்வார் என சத்யநாராயண தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூட ரஜினியும் இதே கருத்தைத்தான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  கமல் பற்றி அப்போதே சொன்னார் என் தந்தை: காயத்ரி ரகுராம்

எனவே, ரஜினியை அரசியலுக்கு இழுக்க வேண்டும் என்கிற ரசிகனின் ஆசை வழக்கம் போல் ஏமாற்றத்துடனே முடிவும் என எதிர்பார்க்கப்படுகிறது.