ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி – சிம்பு விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியாவை, நடிகர் சிம்பு, தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது.

அதுவும் அவரின் பெயரில் இருந்த கணக்கிலிருந்தே இந்த செய்தி வெளியானது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், முற்றிலும் தவறானது என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கௌன்ட் மூலம்  இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.

ஆனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும்   உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை  காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால்  பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அனைத்து ஊடக நண்பர்களை பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.