வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் நிலைகுலைந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் தனது ஆதரவை கேரளாவுக்கு வழங்கியுள்ளார்.

கடவுளின் சொந்த நாடு என போற்றப்படும் கேரளாவை மழை வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது. வீடுகளை இழந்து அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் என அனைவரது உதவியையும் எதிர்பார்த்து நிற்கிறது கேரள அரசு. மீட்பு பணிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக உள்ளது ராணுவம். கேரளாவின் வெள்ளபாதிப்பிற்கு அனைத்து தரப்பினரும் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு தரப்பு மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சிகள், மத்திய அரசு, பிற மாநிலங்கள் என நிதியுதவி கேரளாவுக்கு வருகின்றன.

கேரள வெள்ள பாதிப்புக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, தனுஷ், விஷால், சிவகார்க்திகேயன், ரஜினி, விக்ரம், நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் கேரளாவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் முன்னணி நடிகர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ் நடிகர்களிலேயே அதிகபட்ச தொகையாக ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார். கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்றம் வாயிலாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிதியை விஜய் அனுப்பியுள்ளார்.