நடிகர் அஜித் குமார் படத்தை மொழிமாற்றம் செய்து கர்நாடகாவில் வெளியிட்டால், தியேட்டர்களை கொளுத்துவேன் என பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழில் வெற்றியடைந்த சில படங்களை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்து அந்த ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த படங்கள் வெளியாவதல், கன்னடத்தில் வெளியாகும் நேரடி படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. சில நடிகர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜீத் நடித்து தமிழில் வெற்றியடைந்த ‘உன்னை அறிந்தால்’ திரைப்படம், கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘ சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என்ற தலைப்பில் இன்று கர்நாடகாவில் வெளியனது. ஆனால், அப்படத்தை திரையிட்டால், அந்த படம் ஓடும் தியேட்டர்களை கொளுத்துவேன் என கன்னட நடிகர் ஜக்கேஷ் எச்சரித்துள்ளார். மேலும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள வாட்டாள் நாகராஜ், இதை எதிர்த்து வருகிற 11ம் தேதி வாட்டாள் அவரின் தலைமையில் கர்நாடகாவில் பேரணியும் நடைபெறம் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூர் தவிர, கர்நாடகாவின் மற்ற இடங்களில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.