தொடர்ந்து நடிகைகளை கீழ்த்தரமாக விமர்சித்தால் நடிக்க தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் ராதாரவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொலையுதிர் காலம் பட விழாவில் நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சையாக பேசிய விவகாரம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை கட்சிலிருந்து நீக்கி திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. தனது கருத்துக்கு ராதாரவி வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு ஒரு கண்டன கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

Actor vijay
Nayanthara

கொலையுதிர் காலம் பட விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது.

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை. திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது அது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்.

அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.