அப்ரூவர் ஆன அப்புண்ணி – திலீப்பிற்கு மேலும் சிக்கல்

மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி அப்ரூவர் ஆகியுள்ள விவாகரம் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், கேரள நடிகையை, பல்சுனில் மற்றும் சிலர் சேர்ந்து காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அதை வீடியோவும் எடுத்தனர்.

இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் திலீப் மற்றும் அவரின் மேனேஜர் அப்புன்ணி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி  அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் அப்புண்ணி அப்ரூவர் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், திலீப்பின் வலது கரம் போல் தான் செயல்பட்டதாகவும், திலீப்பிடம் பேச விரும்புகிறவர்கள் முதலில் என்னைத்தான் தொடர்பு கொள்வார்கள். என் செல்போனில் இருந்துதான் திலீப் பலமுறை மற்றவரிடம் பேசியிருக்கிறார் எனக்கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் பூதாகரம் ஆனவுடன் தன்னை திலீப் தலைமறைவாக இருக்கச் சொன்னார் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக, முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை தனக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறியதுதான், தற்போது முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. அதோடு, போலீசாருக்கு தேவையான பல முக்கிய தகவல்களை அவர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் திலீப்பிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.