குன்றத்தூரில் கள்ளக்காதல் மோகத்தால் குழந்தைகளை கொன்ற அபிரமியையும் என்னையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என சின்னத்திரை நடிகை நிலானி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் லலித்குமார் சமீபத்தில் தீகுளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. இதனால் நிலானி தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிலானி நான் எங்கும் தலைமறைவாகவில்லை. நான் ஒரு அனாதை, என் கணவரும் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் என்னை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு லலித்குமார் சிறு சிறு உதவிகள் செய்து வந்தார். ஒரு சமயம் லலித்குமார் என்னிடம் நானும் அனாதை நீயும் அனாதை, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா என கேட்டார். நான் மறுத்துவிட்டேன். பின்னர் எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.

அவனிடம் பழகி 6 மாதத்திற்கு பின்னர் தான் தெரிந்தது அவன் ஒரு மோசடி பேர்வழி என்று. அவன் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி பணத்தை பறித்தவன். தனலட்சுமி என்ற பெண்ணை ஏமாற்றி ஒன்றரை லட்சம் பணம் பறித்துள்ளான். இதனால் நான் அவனை விட்டு விலகினேன். என்னை விடாத அவன், அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்தான். 2 வருடத்திற்கு முன்பாக போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் அவனை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர். சற்று காலம் அமைதியாக இருந்தான்.

தற்போது மீண்டும் வந்து என்னை திருமணம் செய்து கொள்ளக்கூறி தொந்தரவு கொடுத்தான். எனவே, நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  அதனால் லலித் தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை.

பலர் என்னை குன்றத்தூர் அபிரமியோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது என் மனதை மிகவும் புண்படுத்துகிறது. நான் என் குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன். தயவுசெய்து என்னை அபிராமியோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் என நிலானி கண்ணீர் மல்க பேசினார்.