‘தெய்வமகள்’ சீரியல் நடிகை விபத்தில் பலியா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்து வரும் நடிகை ரேகா சென்னை-பெங்களூர் சாலையில் விபத்தில் பலியானதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் விபத்தில் பலியானது ‘தெய்வமகள்’ ரேகா இல்லை என்றும், கன்னட தொலைக்காட்சி நடிகையும் சென்னை அமிர்தா விளம்பரத்தில் நடித்தவருமான ரேகாசிந்து என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞாலையில் இன்று காலை நடிகை ரேகாசிந்து மற்றும் மூவர் காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நடிகை ரேகா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த கார் டிரைவர் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை அமிர்தா உள்பட பல விளம்பர படங்களிலும், கன்னட, தெலுங்கு சீரியல்களிலும் ரேகா சிந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெய்வமகள் ரேகா, தான் நன்றாக இருப்பதாகவும், தனக்கு எந்த ஒரு விபத்தும் நிகழவில்லை என்றும் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்