கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகையின் ரேகாவின் மகள், சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக இணையதளங்களில் வதந்திகள் பரவியது. இந்த வதந்தியை நமது தளத்திலும் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ரேகா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நாம் தவறாக பதிவு செய்திருந்த செய்தி நமது தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்