7 கிலோ எடை குறைத்து சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆகும் சோனா

கோலிவுட்டில் ஹிரோயின் ஆகும் கனவோடு வந்து தோற்றுப் போன நடிகைகள் ஏராளம். அவர்களில் சோனாவும் ஒருவர். இவர் தேடிவந்த ஹீரோயின் கனவு நிறைவேறாவிட்டாலும், நிறைய படங்களில் கவர்ச்சி நடிகையாக வந்துபோனார். அதுமட்டுமில்லாமல், குத்து பாடல்களுக்கும் கவர்ச்சி நடனம் ஆடி, தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இன்றும் வைத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ‘கனிமொழி’ என்ற படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அந்த படம் மூலம் இவருக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமானது. இதில் சோர்ந்துபோன சோனா, தனது செயற்கை நகை விற்கும் கடையையாவது பெரிய அளவில் கொண்டுவர முயன்றார். ஆனால், அதிலும் அவருக்கு தோல்வி ஏற்பட, துவண்டு போனார்.

கடந்த சில வருடங்களாக உடல் பருமன் காரணமாக அவதிப்பட்டு வந்து சோனா, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தியானம், சிகிச்சை என எல்லாவற்றையும் மேற்கொண்டு சுமார் 7 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆகியுள்ளார்.

இவருடைய இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிட்டியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக சோனா நடிக்கிறாராம். அது மட்டுமில்லாமல் விரைவில் நேரடி தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளாராம். சோனாவில் உடல் எடை குறைப்பு முயற்சி அவரை மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரவைக்கும் என நம்பலாம்.